தர மாட்டீங்களா.. அப்ப வட்டியோடு வாங்குறோம்...உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!!

கல்வித் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய பணத்தை ஒன்றிய அரசு தர மறுத்துவிட்டதால், 6 சதவீத வட்டியுடன் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டம் என்பது பாலர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரையிலான முழு வரம்பையும் உள்ளடக்கிய பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். ஒன்றிய அரசு 60 சதவீதமும், .மாநில அரசு 40 சதவீதமும் தனது நிதி பங்களிப்பை இந்த திட்டத்துக்காக வழங்குகின்றன.
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் பணத்தை ஒன்றிய அரசு தர மறுத்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கறிஞர் வில்சன். எம்.பி. தாக்கல் செய்துள்ளார்.
”சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை பெறுவதற்கான தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்து நிறுத்துவது என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி அவமதிப்பதாகும்.
மேலும், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட கல்வி கொள்கையை அமல்படுத்தவும், ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறையில் இருந்து விலக வேண்டும் எனவும் மத்திய அரசு தமிழக அரசை கட்டாயப்படுத்தி வருகிறது.
பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடிதம் அனுப்பியபோது அதில் மும்மொழி கொள்கை தொடர்பான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பதில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அதை ஏற்க முடியாது என மத்திய அரசு
மறுத்துவிட்டது.
இதனால், பிஎம் ஸ்ரீ தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதன் காரணமாகவே சமக்ர சிக்ஷா திட்ட நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. சமக்ர சிக்ஷா மற்றும் புதிய தேசிய கல்வி கொள்கை இரண்டும் வெவ்வேறானவை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தையும், தேசிய கல்வி கொள்கையை அடிப்படையாக கொண்ட பிஎம் திட்டத்தையும் இணைப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஒரு திட்டத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் நிதியை நிறுத்துவோம் என அழுத்தம் கொடுப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, தமிழகத்துக்கான சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியும், நேரில் வலியுறுத்தியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கட்டாயப்படுத்துவது என்பது மாநில சுயாட்சி மற்றும் கட்டமைப்பையும், கல்வி தொடர்பான மாநில அரசின் சட்டங்களை தகர்க்கும் செயலாகும். தமிழகத்தில் தற்போது இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. குறிப்பாக இந்தி, உருதுவை திணிக்கும் வகையில் இந்த மும்மொழி கொள்கை உள்ளது. எந்த மொழியையும் எவர் மீதும் கட்டாயப்படுத்தி திணிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
தமிழகம் ஏற்கெனவே கல்வியில் முன்னேறிய மாநிலமாக நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது. தமிழ் தாய்மொழி அல்லாத பிற மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமச்சீர் கல்வி திட்டம் மூலமாக தரமான சமமான கல்வி போதிக்கப் பட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங் களைவிட தமிழகத்தின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நிதியுதவி என்ற போர்வையில் மத்திய அரசு தனது கொள்கையை செயல்படுத்த வேண்டும் என தமிழகத்தை கட்டாயப்படுத்த முடியாது. மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சூழலில் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரூ.2,152 கோடியை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்யும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.