யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.. ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் 248 கிடங்குகள் இருக்கின்றன. இதிலிருந்து 34,792 ரேசன் கடைகளுக்கு பொருட்கள் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. அதேபோல உணவு பொருட்களுடன் சேர்த்து மண்ணெண்ணெய்யும் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள்.
இந்த நிலையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரேகையைச் சரிபாா்க்க வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.
ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலைக் கூறக்கூடாது என்று ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.