ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றி விடாதீர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!!

நேற்று சென்னையில் நடந்த திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றிவிட வேண்டாம் என்று பேசியுள்ளார்.
”திமுக சட்டத்துறை திமுகவுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு, இந்திய மக்களுக்காகவும் வாதாடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் நாம் முறியடித்தாக வேண்டும். இது நாட்டின் ஜனநாயகத்தை வேரோடு அழிக்கும் செயலாகும். பாஜக நீண்டகாலத் திட்டமாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையை செயல்படுத்த நினைக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பார்கள் பின்னர் ஒரே நாட்டில் ஒரே ஒரு தேர்தல் தான் என்றும் சொல்வார்கள்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்குத் தான் செலவு அதிகமாகும் என்று முன்னாள் தேர்தல் அதிகாரி குரேஷி ஆதாரங்களுடன் கூறியுள்ளார். செலவுக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அவர்கள் சொல்லவில்லை. இது மோடியை சர்வாதிகாரியாக மாற்றுவதற்கு வழி செய்யும். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். கூட்டணி உங்கள் உரிமை. ஆனால் நாட்டின் ஜனநாயகத்தை வேரழிக்கும் இந்தத் திட்டத்தை ஆதரிக்காதீர்கள். அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நான் விமர்சிக்கிறேன் என்ற காரணத்திற்காக அவரை மாற்றி விடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேர்கிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளாஅர்