எனக்கு வேசம் கட்டாதே.. நடிகர் விஜய்க்கு கமல் ஹாசன் எம்.பி. எச்சரிக்கை?
திமுக் மாணவர் அணி சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் எங்கள் கல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மாநில கல்விக் கொள்கை உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் எம்.பி. விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ, திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி கலந்து கொண்டனர்
கல்வியை மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கடந்த காலத்தை பேசிக் கொண்டிருக்காமல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக சட்டத்தை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார் கமல் ஹாசன். ஆங்கிலத்தில் உரையாற்றி பின்னர் தமிழில் அதன் கருத்தாக்கத்தை எடுத்துரைத்தார் கமல். அறிஞர் அண்ணா தந்த இருமொழிக் கொள்கை போதும். பள்ளியில் நான் கற்றது இரண்டு மொழிகள் தான். ஆனால் என்னுடைய தொழில் தேவைக்காக இன்னும் 4 மொழிகளைக் கற்றுக் கொண்டேன். அதைப் போல் தேவையுள்ளவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். பள்ளியில் இருமொழியே எங்கள் கொள்கை.
மாநில அரசுக்குத் தான் மக்களின் பண்பாடு தேவைகள் பற்றி நன்றாகத் தெரியும். எப்படிப்பட கல்வி எம் மக்களுக்குத் தேவை என்பதை மாநில கல்விக் கொள்கை வரையறுத்துள்ளது. கல்வி உரிமையை மாநில அரசுக்குப் பெற்றுத் தருவதே நம்முடைய வேலை என்று கமல் ஹாசன் எம்.பி. பேசினார்.
அவருடைய பேச்சின் நடுவே எனக்கு வேசம் கட்டாதே? எல்லா வேசமும் போட்டவன் நான்.நான் போடாத வேசம் இல்லை. வேசம் போட வைச்சு இயக்கியவனும் நான் என்று சற்று ஆவேசமாகப் பேசினார் கமல் ஹாசன். மதுரை தவெக மாநாட்டில் கமல் ஹாசனை வம்பிழுத்துப் பேசியிருந்தார் நடிகர் விஜய். அவருக்கு பதிலளிக்கும் வகையிலேயே கமல் ஹாசன் எம்.பி.யின் பேச்சு இருந்ததாகக் கூறப்படுகிறது.
