சீண்ட வேண்டாம்! செங்கோட்டையன் ஆவேசம்!!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடும் மோதல் உருவாகியுள்ள சூழலில் கோபியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் உரையாற்றினார்.
அப்போது, “அத்திக்கடவு திட்டத்திற்கான பாராட்டு விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பெயர் இல்லை என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்
நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்.ஜி.ஆர். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும்தான்.
அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை ஒதுக்கி வைத்தார் ? என்பதை சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
தான் பேசியதை திரித்து பிரச்சனை ஏற்படுத்த வேண்டாம் என்ற தொனியில் பேசியிருந்தாலும், ஜெயலலிதா அவரை ஏன் ஒதுக்கி வைத்தார் என்பதை சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என ஏன் பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில்பாலாஜி சிறையிலிருந்து வந்ததும் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சரியான சூழல் வரும் வரை காத்திருந்து தற்போது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார், விரைவில் திமுகவில் ஐக்கியமாவார் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
அவர் ஒரு போதும் திமுகவுக்குச் செல்லமாட்டார். அதிமுக தொடர்ந்து தோற்று வருவது தான் அவருக்கு வருத்தமாக உள்ளது. எனவே ஒருங்கிணைந்த அதிமுகவாக பழைய பலத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் செங்கோட்டையனின் விருப்பம் என்று மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.
வாய்ப்புகள் வரும் போதும் , எதிர்ப்புகள் கிளம்பும் போதும் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து தானே ஒருவரின் அரசியல் சதுரங்க விளையாட்டு தொடரும்.