வளர்ப்பு யானை மூர்த்தி உயிரிழப்பு.. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

 
Elephant moorthy

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற வளர்ப்பு யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகளைப் பராமரித்து வருகின்றனர். இதில் மக்னா யானை மூர்த்தியும் ஒன்று. மூர்த்தி என்ற மக்னா யானை தெப்பக்காடு யானை முகாமில் 1998-ம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை தனது 58 வயதை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் அதற்கு கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது.

கடந்த 1998-ம் ஆண்டில் மக்னா ஆண் யானை கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 23 பேரை கொன்றது. அதனை சுட்டுக் கொல்ல கேரளா வனத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்தது. இதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டது. 

Elephant moorthy

இதனை தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் உதவியுடன் வாச்சுகொல்லி என்ற இடத்தில் வைத்து யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் உடலில் குண்டு காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் இருந்த நிலையில் தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி கண்ணும் கருத்துமாக கவனித்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இதனால் மிகவும் மூர்க்கமாக இருந்த யானை சாதுவாக மாறிப்போனது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, தரையில் படுத்துவிட்டது. கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 9.15 மணிக்கு வளர்ப்பு யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மூர்த்தி யானையின், மறைவு வனத்துறையிரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Elephant moorthy

இறந்த மூர்த்தி யானையின் நல்லடக்கம் செய்யும் முன்பு அரசு மரியாதையுடன் வனத்துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்பு கும்கி யானைகள் தும்பிக்கையை தூக்கி பிளறி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் மூர்த்தி யானைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

From around the web