முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் உரையை இந்தியில் மொழி பெயர்த்தது யார் தெரியுமா? அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பாராட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையில் , தேஜஸ்வி யாதவ் உடன் பேரணியாக சென்று, பொதுக்கூட்டத்தில் பேசியது பீகாரில் மட்டுமல்ல வட இந்தியா முழுவதும் பேசு பொருளாக ஆகி உள்ளது.
அனைத்து தரப்பு மக்களையும் சமூக ஊடகங்கள் ஆட்கொண்டு விட்ட பிறகு, தென்னிந்தியாவிலிருந்து எந்த ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரும் வட இந்தியாவில் சென்று அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியது இல்லை. அதுவும் தன்னுடைய தாய்மொழியான தென்னிந்திய மொழிகளில் யாரும் பேசிய வரலாறு கிடையாது. இந்தியிலோ ஆங்கிலத்திலோ தான் உரையாற்றி இருக்கிறார்கள்.
மிகச் சமீபத்தில் தான் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் இந்தியில் பேசிச் சென்றார். அக்கட்சியைச் சார்ந்த ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணத்திற்கு பல தரப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், வடக்கே சென்று தமிழில் பேசி கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு வந்த பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முதலமைச்சரின் உரையை இந்தியில் மொழி பெயர்த்துச் சொன்ன மொழி பெயர்பாளரின் பங்களிப்பும் முக்கிய காரணமாகும். ஒவ்வொரு வாக்கியத்தையும் மொழி பெயர்த்து இந்தியில் சொன்ன போது கூடியிருந்த பொது மக்கள் தொடர்ந்து கைத்தட்டி வரவேற்றனர். தமிழிலிருந்து இந்திக்கு யார் இவ்வளவு தெளிவாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் மொழி பெயர்த்தார் என்ற கேள்வி அனைவருடைய முகத்திலும் காண முடிந்தது.
முதலமைச்சரின் உரையை இந்தியில் மொழி பெயர்த்தது பிரபல வழக்கறிஞரும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அலிம் அல்புகாரி ஆவார். முதலமைச்சர் தனி விமானத்தில் பீகார் சென்ற போது உடன் சென்று அவருடைய தமிழ் உரையை இந்தியில் மொழி பெயர்த்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் வழக்கறிஞர் அலிம் அல்புகாரி. இவர் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெளிந்த நீரோடை போல் கருத்துக்களை எடுத்து வைப்பவர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தமிழ் உரையை இந்தியில் மொழி பெயர்த்துச் சொல்ல வாய்ப்பளித்த முதலமைச்சருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அலிம் அல்புகாரி. உடன் முதலமைச்சருடன் விமானத்தில் சென்ற படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அலிம் அல்புகாரியின் எக்ஸ் தள பதிவில் அருமையான பணி என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. மேலும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பலரும் அலிம் அல்புகாரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழிலிருந்து தெள்ளத் தெளிவாக இந்தியில் மொழி பெயர்க்க அலிம் அல்புகாரி கிடைத்துள்ளதால், இனி அடிக்கடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா அணி சார்பில் வட இந்திய தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
Thanks @SPK_TNCC Thalaivar and @mkstalin CM sir and @KanimozhiDMK madam for reposing great faith on me and giving the opportunity to translate Chief minister’s speech from Tamil to Hindi in the historical #VoteAdhikarYatra in front of our beloved jannayak Leader @RahulGandhi ji… pic.twitter.com/mucf7SJY7F
— Adv. Alim Albuhari (@AlimAlbuhari) August 27, 2025
