அமித் ஷா ஆஃப் பண்ணின அண்ணாமலையின் அடுத்த குறி என்ன தெரியுமா?

எடப்பாடி பழனிசாமி கொடுத்த அண்ணாமலை ஃபைல் நல்லா வேலை செஞ்சிருக்கும் போல. டெல்லியில் பேட்டி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் உடல்மொழியிலும் குரலிலும் பெரும் மாற்றத்தைக் காண முடிந்தது. பாஜக என்ற கட்சியை விட தமிழ்நாட்டு நலன் தான் முக்கியம். எனக்குத் தலைவர் பதவி எல்லாம் தேவையில்லை, கடைக்கோடி தொண்டனாக வேலை செய்வேன் என்றெல்லாம் தடாலடியாக பல்டி அடித்துள்ளார்.
இதே அண்ணாமலை தான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆவேசமாகப் பேசியவர். அதைத் தான் தற்போது கமுக்கமாகச் செய்ய முடிவெடுத்து விட்டார் போல. தமிழ்நாடு பாஜக வழக்கப்படி முன்னாள் தலைவர்களின் பணியைப் பாராட்டி ஆளுநர்களாக அல்லது ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
முன்னாள் மாநிலத் தலைவர்களான இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநர்களாக செட்டில் ஆகிவிட்டனர். தமிழிசை சவுந்திரராஜனுக்கு தெலங்கானா புதுச்சேரி ஆளுநர் பதவி தரப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சர் ஆகலாம் என்ற கனவோடு பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் உள்ளதும் போச்சு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டார். எல்.முருகன் இரண்டாவது தடவையாக ஒன்றிய அமைச்சர் ஆகிவிட்டார்.
இந்த வழக்கப்படி அண்ணாமலை ஒன்றிய அமைச்சர் ஆகனும் என்றால் முதலில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகனும். ஜூலையில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மனசு வைத்தால் ஆகலாம். ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். ஏதாவது ஒரு வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆளுநராகப் போவது தான் அடுத்த வாய்ப்பு.
இங்கு தான் அண்ணாமலை தனது அரசியல் சாமர்த்தியத்தைக் காட்டியுள்ளாராம். எனக்கு கட்சிப்பொறுப்புகளோ, ஆளுநர், அமைச்சர் பதவியோ வேண்டாம். 2026 தேர்தலில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு மட்டும் தாருங்கள் என்று கேட்டுள்ளாராம்.
நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் தனது செல்வாக்கால் இரண்டாம் இடத்திற்கு வந்த அண்ணாமலை அதே தொகுதியில் உள்ள கோவை வடக்கு தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுகவும் சேரும் போது வெற்றி நிச்சயம் என்று கருதுகிறாராம். அங்கே தற்போது அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதிமுக தொகுதியைப் பறித்து தனக்குத் தாருங்கள் என்பது தான் அண்ணாமலையின் வேண்டுகோள்.
எடப்பாடி விட்டுக்கொடுப்பாரா என்ன? சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் மேலும் மேலும் குடைச்சல் கொடுக்க மாட்டாரா? ஒருவேளை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவது தான் அண்ணாமலையின் திட்டமாம். அதன்பிறகு முதலமைச்சர் ஆகிடலாம் என்பது பாஜகவின் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஃபார்முலா அல்லவா!!
அண்ணாமலை விஷயத்தில் என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது 2026 தேர்தலில் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக அமையும்.