விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 
Vikravandi

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல் வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார். 20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

Vikravandi

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.

அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது.

MKS

இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம்.மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்கள், மாவட்டப் பொறுப்பாளர் கௌதமசிகாமணி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பாமக அவர்களின் பிரச்சாரத்துக்கு ஏற்ப வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த வெற்றி முதல்வரின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.

From around the web