பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தையால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் கைது!! அதிர்ச்சி வீடியோ

கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கத்தை சேலம் மாநகர போலீசார் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கடந்த 26-ம் தேதி கோவில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சாதியவாதிகள் பட்டியலினத்தவர் கோயிலுக்குச் சென்றால் தீட்டு என கூறியதாகத் தெரிகிறது. இந்தச்சூழலில் ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கம், கடந்த 27-ம் தேதி பொதுவெளியில் வைத்து பிரவீன் மற்றும் அவரது தாய் தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து அநாகரிமாக மிகவும் முகம் சுளிக்கும் வார்த்தைகளால் கண்டித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சேலம் கிழக்கு மாவட்டம் சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாணிக்கம் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சேலம் இரும்பாலை போலீசார் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினர் இரும்பாலை காவல் நிலையம் முன்பு திரண்டு காத்திருந்தனர். மாணிக்கத்தை போலீசார் அழைத்து செல்வதை அறிந்த ஊர் மக்கள் சாலையில் திடீரென அமர்ந்து போலீசார் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
Segregation is not social justice.
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 30, 2023
Manickam, a DMK leader, threatened to kill a SC youth and hurled casteist slurs after entering a temple in TN's Salem.
Dominant caste people are horribly segregating the SC community and CM @mkstalin fails to control their tyranny. pic.twitter.com/j3flHtU6u8
இதனை அடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு போலீசார் அவரை இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனை அடுத்து மாணிக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் ஒரு சில காவலர்களின் சட்டையும் கிழிந்தது. காவல் உதவி ஆணையாளர் ஆனந்தி தலைமையில் காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து சேலம் மாநகர காவல்துறை இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சேலம் மாநகர டி4 இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி கிராம பஞ்சாயத்தில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் பண்டிகையின் போது அதே ஊரில் குடியிருக்கும் (இந்து ஆதிதிராவிடர்) வகுப்பைச் சேர்ந்த பிரவின்குமார் த.பெ.செந்தில் என்பவர் 26.01.2023ம் தேதி இரவு 8.30 மணியளவில் மேற்படி கோவிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டு வந்துள்ளார். அவரை 27.01.2023ம் தேதி அன்று காலை திருமலைகிரி கிராம பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம் (இந்து வன்னியர்) மேற்படி கோவிலுக்குள் நுழைந்த காரணத்தினால் பிரவின்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்ப்பட்டதாக பிரவின் குமார் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு புலன்விசாரணை செய்து மாணிக்கம் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது போன்று தவறுகள் யார் செய்தாலும் காவல் துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.