ஐடி, அமலாக்கத்துறை, சிபிஐ வுடன் தான் திமுக போட்டி! முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேச்சு!!
2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக திமுக கட்சி அமைப்பு ரீதியாக 7 மண்டலப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு. எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை தெற்கு, தென் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. அடுத்ததாக சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் ஆ.ராசா பங்கேற்றார்.
இரு நிகழ்ச்சிகளிலும் மாவட்டச்செயலாளர்கள் மற்றும் தன்னுடைய தரப்பிலிருந்து ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார் ஆ.ராசா. பின்னர் இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் ஐடி, அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளுக்கும் தான் போட்டி. எந்த நேரத்தில் என்ன நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பார்கள். அனைத்தையும் எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை தொடரச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
2026 தேர்தலில் ஒன்றிய அரசின் துறைகள் திமுகவுக்கு எதிராக திருப்பிவிடப்படும் என்பதை திமுக தரப்பு மிகவும் தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் தக்க எதிர்நடவடிக்கைகளுக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சு அதை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.
