டெல்லியில் திமுக போராட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

கல்வியுரிமையை மாநிலத்திற்கு மாற்றவும் மாநில உரிமைகளைக் காக்கவும் தலைநகர் டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவபுரம் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ் நிலத்தில் 5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் தொன்மை இருந்ததாக அறிவித்திருக்கிறோம். இதை அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளைக் கூட சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொல் சமூகமான தமிழ் சமூகம் மீது நேரடியாக ஆரிய மொழியை திணிக்க முடியவில்லை என்ற காரணத்தால் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலம் திணிக்க முயல்கிறார்கள்.
அன்று மொழிப்போரில் ஈடுபட்டு இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளைக் காப்பாற்றினோம். இன்று கல்வி உரிமைப் போரில் ஈடுபட்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையை காக்க போராடுவோம். தலைநகர் டெல்லியில் திமுக மாணவர் அணியினர், கழக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கல்வி உரிமையை மாநிலத்திற்கு மாற்றுவதற்காகவும், மாநில உரிமைகளைக் காக்கவும் போராட்டம் நடத்த உள்ளார்கள் என்று கூறினார்,