திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு.. கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

 
CM-MKS

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மே 7-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றதுமே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொரோனா உயர் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை, கொரோனா நிவாரணமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் ஆயிரம் வழங்கல், பொதுமக்களின் மனுக்கள் மீது நூறு நாளில் தீர்வு காண்பதற் கென்று முதல்வர் குறை தீர்க்கும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற தனித்துறை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.

CM Mks

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 4-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியதாவது, வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று தமிழ்நாட்டிற்கு முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், சாதனைகள் என்னென்ன என்று தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.

திராவிட மாடல் அரசு செய்துகொடுத்த திட்டங்களை நான் சொல்வதைவிட பயனடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான சாட்சி. ஸ்டாலின் என்றால் உழைப்பு... உழைப்பு... உழைப்பு என்று சொன்னாரு; அப்படி எங்களை எல்லாம் ஆளாக்கிய அன்பு தலைவர் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல்... செயல்... செயல்... என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறேன்.

எப்போதும் நான் சொல்வது இது என்னுடைய அரசு அல்ல; நமது அரசு. அந்தவகையில் நமது அரசு 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என்று உறுதியேற்று, ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்வேன்.


இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்... தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு. இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார்.

முன்னதாக திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்று பூ தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, எ.வ.வேலு, டி.ஆர். பாலு எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

From around the web