திமுகவும் விசிகவும்! இணைய இல்லீகல் உ.பி.யின் அட்வைஸ்!!
முதன்முதலாக திருமாவளவன் சட்டமன்றம் சென்றதும் திமுக கூட்டணியில் இருந்த போது தான்.
இடையில் வெளியேறி, சேர்ந்து, மீண்டும் வெளியேறி, மீண்டும் சேர்ந்து, 2019 தொடங்கி 2 மக்களவை தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல் என்று போட்டியிட்டு 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள், கட்சிக்கான தேர்தல் கமிசன் அங்கீகாரம் என்று தொடர்ச்சியாக வெற்றிப்பாதை பயணத்தில் இருக்கிறார் திருமாவளவன்.
2016 தவிர்த்து, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கூட்டணிக்குள் இருந்த தேர்தல்களில் கூட திமுகவினரின் விமர்சனத்துக்காே வெறுப்புக்கோ ஆளாகாத ஒரே தலைவரும் திருமாவளவன் தான்.
2019 மக்களவை தேர்தலில், தங்கள் கட்சியும் கூட்டணியும் 38 தொகுதிகளை கைப்பற்றிய நிலையிலும் வெற்றியை கொண்டாடத் துவங்காமல் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி தேர்தல் முடிவுக்காக இரவெல்லாம் காத்திருந்தவர்கள் திமுகவினர்.
2014 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கொண்ட India Block கட்சிகள் விசிக & IUML தான்.
இந்த இருகட்சிகளுக்குமிடையே பொதுவாக இருக்கும் சித்தாந்த பிணைப்பே, இப்படி இயல்பான ஒரு புரிந்துணர்வும் ஒற்றுமையும், விருப்பமும் இரு கட்சித் தரப்பிடமும் நிலவக் காரணமாகயிருக்கிறது.
காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும், மதிமுகவும் வாங்கிய, வாங்கும் இணைய குத்துகளை தொடர்ந்து படித்தால் நான் மேலே சொல்லியிருக்கும் இணைப்பும் பிணைப்பும் என்னவென்று எளிதில் புரியும்.
அப்படியான இயல்பான இணைப்பிலும் பிணைப்பிலும் விழுந்த ஒரு அடி காரணமாக உருவான காயத்துக்கு மருந்து தடவப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில், கூட்டணியில் இப்படி நடப்பதும் இயல்பே. என்ன தான் பொதுப் பிரச்சனை, பொது எதிரி, Common Goals என்று சேர்ந்தியங்கினாலும் தத்தம் கட்சியின் வளர்ச்சி, வெற்றிப்பயணம், நிலைத்தன்மை, முன்னேற்றம் என்று வரும் போது பல்வேறு விதமான யுக்திகளை கையாள்வது தலைவர்களின் தந்திரமாகவே கருதப்படும்.
கடந்த சில வாரங்களாக 'விகட'கவிகளால் வலிந்து உருவாக்கப்பட முயன்ற பிணக்கின் காரணமாக நடந்த இணைய சண்டைகள் ஓய்ந்துவிட்டது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே!
அகில இந்தியளவில் திமுக - காங்கிரஸ் கூட்டணி எத்தனை முக்கியம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியம் வாய்ந்தது தமிழ்நாடு அளவிலான திமுக - விசிக கூட்டணி.
உதயநிதி கழுத்தில் விசிக நிறத்திலான துண்டும், திருமாவளவன் கழுத்தில் திமுக நிறத்திலான துண்டும் இருப்பதே தமிழ்நாட்டுக்கும், திமுகவுக்கும், விசிகவுக்கும் நன்மை பயக்கும்!
குறிப்பு: இது ஒரு இல்லீகல் இணைய உபியின் 200 ரூபாய் பதிவு!
- அ.சிவகுமார்