கணவனை இழந்த பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு... அடித்து துன்புறுத்திய மாவட்ட பாஜக பிரமுகர் கைது!!

கிருஷ்ணகிரி அருகே பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்டிபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார். இவர் கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடனும் இவருக்கு தொடர்பும் இருந்துள்ளது. கணவனை இழந்த அந்த பெண் அப்பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அவருக்கு அடைக்கலம் தருவதாக கூறிய மன்னன் சிவா தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் அந்த பெண்ணை தங்க வைத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் மன்னன் சிவா அவரிடமிருந்து 20 சவரன் நகைகளை வாங்கி, அதை விற்று செலவு செய்திருக்கிறார். மேலும் அந்த பெண்ணிடம் சிவா பணம் கேட்ட நிலையில் அவர் கொடுக்க மறுத்து இருக்கிறார். இதனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறி மன்னன் சிவா மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, வீட்டை காலி செய்ய வேண்டுமானால், தன்னிடம் இருந்து வாங்கிய நகை மற்றும் பணத்தை திரும்ப தரும்படி அந்த பெண் சிவாவை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவா அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டியும், கட்டையால் தாக்கியும் கொடுமைபடுத்தி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவா மீது கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மன்னன் சிவா அந்த பெண்ணிடம் நகைகளை வாங்கியது உண்மை என்பது தெரியவந்தது. மேலும் அதனை திரும்ப கேட்டபோது அவரை அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மன்னன் சிவா மீது பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.