இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் மரணம்.. ராஜ்நாத் சிங், மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி!
இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் இன்று மாரடைப்பால் காலமானார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.
முன்னதாக சென்னையில் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னை வந்திருந்தார்.
இந்நிலையில் தான் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்யப்பட்டனர். மேலும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் திடீரென்று இன்று மாலையில் ராகேஷ் பால் உயிரிழந்தார்.
மரணமடைந்த ராகேஷ் பால் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) 25-வது தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989-ல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் கன்னேரி மற்றும் ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவத்தையும், இங்கிலாந்தில் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கன்ட்ரோல் சொல்யூஷன் படிப்பையும் பெற்றுள்ளார்.
#WATCH | Defence Minister Rajnath Singh and Tamil Nadu CM MK Stalin paid last respects to Indian Coast Guard chief Rakesh Pal who passed away today in Chennai after suffering a cardiac arrest. pic.twitter.com/1dgAXf32U5
— ANI (@ANI) August 18, 2024
34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை தலைமை இயக்குநர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் டெல்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குநர். இது தவிர, டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குநர் (உள்கட்டமைப்பு மற்றும் பணிகள்) மற்றும் முதன்மை இயக்குநர் (நிர்வாகம்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஐசிஜிஎஸ் சமர்த், ஐசிஜிஎஸ் விஜித், ஐசிஜிஎஸ் சுசேதா கிருபளானி, ஐசிஜிஎஸ் அகல்யாபாய் மற்றும் ஐசிஜிஎஸ் சி -03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கடந்த 2013-ம் ஆண்டு கடலோர காவல்படை பதக்கம் வழங்கப்பட்டது. முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் கடலோர காவல்படை பதக்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.