2 ஆயிரம் கோவில் நிலத்தை வித்துட்டாங்க.. சிதம்பரம் தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை குற்றச்சாட்டு!

 
Chidambaram

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 முதல் 2014-ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் கோவிலில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக அறநிலையத்துறை குற்றம் சாட்டியது. சிதம்பரம் கோவில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிமன்றம் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டது. மேலும், 2014 - 2015 முதல் 2023-2024 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான வருமானம் செலவு குறித்த கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

Chidambaram

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீட்சிதர்கள் தரப்பில் கோவிலில் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்கு விவரங்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதிகள் இந்த அறிக்கையை தாங்கள் கேட்கவில்லை. இது வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த அறிக்கை. நாங்கள் ‘புக்ஸ் ஆப் அக்கவுண்ட்’ என்று சொல்லக்கூடிய முழுமையான கணக்கு விவரங்களை கேட்டதாக தெரிவித்தனர்.

அதற்கு  தீட்சிதர்கள தரப்பில், முழுமையான கணக்கின் புத்தக வால்யூம் அளவு பெரியதாக இருக்கும். அதனால் தற்போது தாக்கல் செய்வது சிரமம் என்று தெரிவித்தனர். கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறையின் நிர்வாகித்து வருவதாகவும், அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் கோவிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்திருந்த நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், அதற்கான அறிக்கைகள் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

High-Court

அதேநேரம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு தீட்சிதர்கள் விற்பனை செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். 

2 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்தும், ஆயிரம் ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்திற்கு குறைவாகவே வருமானம் வருவது மற்றும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை கணக்கில் சேர்க்காதது குறித்தும் அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், 2017-18 ம் ஆண்டில் இருந்து 2021-22 ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் கோவிலுக்கு சொந்தமாக தற்பொழுது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்தும் அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

From around the web