தோண்டத் தோண்ட தொன்மை!! தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி புதிய கண்டுபிடிப்புகள்!!

கடந்த மாதம், தமிழ்நிலப்பரப்பில் இரும்பு பயன்படுத்தப்பட்ட தொன்மை காலத்தை, ஆதாரப்பூர்வமாக அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த 2021ம் ஆண்டுக்குப் பிறகு கீழடி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய அகழ்வாய்வுகள் பல்வேறு இடங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அகழ்வாராய்ச்சி இடத்திலிருந்தும் ஆச்சரியமூட்டும் வகையில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இங்கு, ஏராளமான மண்பாண்ட பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள், தங்க ஆபரணம், உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
தற்போது உருண்டை வடிவ மெருகேற்றும் கற்கள் கிடைத்துள்ளன. மெருகேற்றும் கற்களை கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை தயாரிக்கவும், மெருகேற்றவும் பயன்படுத்தி உள்ளனர் என அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்துள்ளார்