செல்வப் பெருந்தகை பற்றி சாதிய வன்மத்துடன் பேசினாரா எடப்பாடி பழனிசாமி?
நீலகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிசாமி,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையை "பிச்சைக்காரன் ஒட்டு போட்ட சட்டையில் வருவது மாதிரி பல கட்சிகளில் இருந்து வந்தவர்" என்று விமர்சித்திருந்தார் . இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதைப் போல் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்களை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வாரா என்று கேள்விகளை பலரும் எழுப்பியுள்ளனர். செல்வப் பெருந்தகை சார்ந்த சாதியை இழிவு படுத்தும் வகையில் இவ்வளவு தரக்குறைவாக பேசினாரா என்றும் கேள்விகள் சமூகத்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளன.
தன்னுடைய சாதியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் யாரையாவது எடப்பாடி பழனிசாமி இந்த சொல்லைப் பயன்படுத்தி விமர்சித்திருப்பாரா என்ற கேள்விகளும் எழுகிறது.
”எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததெல்லாம், பொது வெளியில் ஒரு பிச்சைக்காரர் என்று, என்னை இழிவுபடுத்துகின்ற நினைப்பில், விளிம்பு நிலையில் உள்ள வெகுஜன மக்களை இழிவுபடுத்துகிறார் கோயிலில் நேர்த்திக்கடனுக்காக மடிப்பிச்சை எடுப்பவர்களை கேவலப்படுத்துவாரா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார் செல்வப் பெருந்தகை.
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருகட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தை துடைப்பத்தால் அடித்து, தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாளை போலீசார், உருவ படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து எடப்பாடி படத்தை காங்கிரசார் ஆவேசமாக கிழித்து எறிந்தனர்.
