மலை ஏறிய பக்தர் பலி.. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு.. வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்!
வெள்ளியங்கிரி மலை ஏறிய 46 வயது நபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறி சென்றால், அங்கு காட்சியளிக்கும் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) தனது நண்பர்கள் 10 பேருடன் அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற தொடங்கினார். முதலாவது மலையில் ஏறியபோது திடீரென புண்ணியகோடிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து உடன் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு கீழே அழைத்து வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 8 பேர் ஏற்கனவே பலியாகியிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.