தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு.. பிரபல நடிகை கஸ்தூரி மீது புகார்
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்று முன்தினம் (நவ. 3) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்று பேசினார்.
கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்தன. இதையடுத்து தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி நேற்று விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. தெலுங்கு மக்கள் பற்றி தவறாக பேசவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
இந்த சூழலில், தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு கருத்து கூறிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி அல்லிநகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இனவாதத்தை தான் பேசவில்லை என அவர் அழுத்தமாக கூறினாலும், சட்ட நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அல்லிநகர் பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அளித்த புகாரில், தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்து, தெலுங்கு மன்னர்கள் உருவப்படத்திற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சின் காரணமாக தெலுங்கு பேசும் 2 கோடி மக்கள் வேதனை அடைந்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.