தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி

 
Kasthuri

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி, வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்று முன்தினம் (நவ. 3) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்று பேசினார்.

கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்தன. இதையடுத்து தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி நேற்று விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. தெலுங்கு மக்கள் பற்றி தவறாக பேசவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.

kasthuri

தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன, நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள், தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை, கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்.    

Kasthuri

தெலுங்கில் எனது திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை வழங்கியுள்ளார்கள். நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களுக்குச் சூழல்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

From around the web