உள்ளே அனுமதி மறுப்பு... இரும்பு கதவை பதம் பார்த்த தேர்வர்கள்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தில் பரபரப்பு!!

 
Kanchipuram

காஞ்சிபுரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வர்களுக்கு அதற்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது.

TNPSC

இந்த நிலையில் காலையில் தேர்வு முடிந்து பின் மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வுக்கு, தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள் நுழைய வேண்டும் என விதிகள் இருந்தது. இந்தநிலையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளே விடக் கோரி போலீசாரிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மெல்ல மெல்ல இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவாயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து தேர்வெழுத தொடங்கினர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

TNPSC

போலீசார் குறைவான பாதுகாப்பு பணியில் இருந்ததால் தேர்வர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் வந்ததும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தற்போது உள்ளே சென்ற மாணவர்களுடன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் தேர்வர்கள் ஐந்து நிமிடம் தாமதமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியை தேர்வர்கள் எழுப்பியதால் இந்த சர்ச்சை உருவானது.

From around the web