9 வயது சிறுவனை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்.. திருப்பத்தூரில் சோகம்!
திருப்பத்தூர் அருகே 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி மணிமேகலை. இந்த தம்பதிக்கு 9 வயதில் கவியரசு என்ற மகனும், 7 வயதில் சொல்மதி என்ற மகளும் இருந்தனர். இதில், தனியார் பள்ளி ஒன்றில் கவியரசு 5-ம் வகுப்பும், சொல்மதி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த செப். 17-ம் தேதி கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கவியரசின் பெற்றோர், அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு கவியரசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கவியரசை, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், நேற்று இரவு (செப். 18) சிகிச்சை பலனின்றி கவியரசு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பம் பொம்மிக்குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பொம்மிகுப்பம் சின்ன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை செய்யாமல், குப்பைக் கழிவுகளை தேக்கி வைத்ததாலே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உயிரிழந்துள்ளார். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.