5 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இதுவரை 4,200 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சையினை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிர்நாடு முழுவதும் உள்ள மகபேறு மருத்துவமனை வளாகங்களை தண்ணீர் தேங்காமல் இருக்கவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதவர்களுக்கு, கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு குறைவுதான். இருப்பினும் கடைசி மூன்று மாதங்களில் பாதிப்பு கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறிய அமைச்சர், தற்போது 343 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இறந்தவர்களும் பாதிப்பு ஏற்பட்ட உடனே மருத்துவமனை வராமல் இருந்தது தான் காய்ச்சல் ஏற்பட்ட உடனே அனைவரும் மருத்துவமனை வரவேண்டும்” என்றும் தெரிவித்தார்.