தீபாவளி பண்டிகை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், படிப்பு நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சென்னையில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் விடப்படும்.
சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து இன்று இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பேருந்து நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.