கடன் பிரச்சனை.. ரயில் முன் பாய்ந்த VAO.. ஈரோட்டில் அதிர்ச்சி!

 
Erode

ஈரோட்டில் கடன் தொல்லையால் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் பவானி அருகே உள்ள ஒரிச்சேரி புதூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு குழந்தையும் இறந்துவிட்டது.

செந்தில்குமார் குடும்ப பிரச்சினை காரணமாகவும், கடன் தொல்லையாலும் கடந்த சில மாதங்களாக மனவேதனையுடன் காணப்பட்டார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று மதியம் தனது பெரியம்மாளின் மகளான ரம்யாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். 

train-suicide

அப்போது அவர், தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதனால் பதற்றம் அடைந்த ரம்யா மீண்டும் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. 

இதனிடையே ஈரோட்டில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாள பகுதியில் செந்தில்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு செந்தில்குமார் பாய்ந்தார். இதனால் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். 

Erode Railway PS

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web