வெயிலுக்கு தமிழ்நாட்டில் உயிர் பலி.. வேலூர் அருகே சோகம்!!

 
Vellore Vellore

விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலால் 48 வயது நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 18 பகுதிகளில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இதில், அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது.

இதனிடையே இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் மதிய வேலைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிற்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

dead-body

வழக்கத்தை காட்டிலும் வெயில் அதிகமாக இருப்பததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறுகளை வாங்கி மக்கள் குடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் 48 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொய்கை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த முருகன் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Police

From around the web