ஹோட்டல் தண்ணீர் டிரம்மில் செத்து கிடந்த எலி.. அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள்!
தாம்பரத்தில் உள்ள உணவகத்தில் தண்ணீர் டிரம்முக்குள் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாக்யராஜ். இவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள கால் டாக்ஸி ஸ்டாண்டில் டிரைவராக உள்ளார். இந்த நிலையில், லட்சுமிபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றார்.
உணவு அருந்திய பின் பாக்யராஜ், டிரம்மில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்துள்ளார். அப்போது தண்ணீர் டிரம்முக்குள் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி உணவகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.