முந்தைய நாள் வரை அமைச்சருடன் இருந்துவிட்டு தவெகவுக்குச் சென்ற டேவிட் செல்வின்!!

 
David Selvin

ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின் திமுகவிலிருந்து விலகி தவெக வில் இணைந்த செய்தி வெளியானது முதல் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

1996ல் திமுகவின் இளம் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற  போதும் அப்போதைய மாவட்டச் செயலாளர் கலைஞரின் முரட்டு பக்தர் என்.பெரியசாமியை மீறி டேவிட் செல்வினால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரியசாமியுடன் மல்லுக்கட்ட முடியாமல் அதிமுகவுக்குப் போனார். அங்கே அதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அமைச்சர் ஆகிவிட்ட எஸ்.பி.சண்முகநாதன் வளர்ச்சியில் டேவிட் செல்வின் அங்கேயும் வாய்ப்புகளை இழந்து விட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் அதிமுகவில் இருந்த டேவிட் செல்வினை திமுகவுக்கு அழைத்து வந்து செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் பெற்றுத் தந்தார். அமைச்சருடன் வலம் வந்தவாறு இருந்த டேவிட் செல்வின் திடீரென தவெகவுக்கு தாவியுள்ளார். அந்தக் கட்சியில் சேர்வதற்கு முந்தைய நாள் இரவு கூட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் சாத்தான்குளத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், திடிரென்று தவெகவுக்கு ஏன் சென்றார் என்று உடன்பிறப்புகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.

பெரிய அளவில் பணம் தருவதாகச் சொல்லித்தான் தவெகவுக்கு அழைத்திருப்பார்கள். மற்றபடி பதவிகளுக்காக அந்தக் கட்சிக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. அண்ணாச்சியுடன் இருந்தால், மரியாதையான இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். ஒரு வேளை மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்திருக்கலாம். விஜய் கட்சியில் சேர்ந்ததால் செல்லாக்காசு ஆகிவிடுவார் என்று உடன்பிறப்புகள் சிரித்து மகிழ்கின்றனர்.

ஆனால் தவெக தரப்பிலோ வேறு விதமான பேச்சு உலவுகிறது. தூத்துக்குடி தெற்கு, வடக்கு என இரண்டு மாவட்டச்செயலாளர்களும் அமைச்சராக இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட எம்.பி.யாக கனிமொழி  இருக்கிறார். இந்த ஜாம்பவான்களுடன் போட்டியிட வேண்டும் என்றால் ஒரு முதிர்ந்த உள்ளூர் அரசியல்வாதி வேண்டும். திமுக, அதிமுக என இரண்டு கட்சித் தலைவர்களையும் அறிந்தவர் தேர்தல் நேரத்தில் அதிரடி காட்டுவார் என்று கூறுகின்றனர். 

விஜய் ரசிகர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த பில்லா ஜெகன் திமுகவில் செட்டிலாகி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் நெருக்கமாக உள்ளார். அவருடைய சகோதரியைத் தான் தற்போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக விஜய் நியமித்துள்ளார். டேவிட் செல்வின் வருகை தவெக வுக்கு தூத்துக்குடியில் மாற்றம் தருமா? அல்லது மூன்றாம் நான்காம் இடத்திற்குப் போகுமா என்று தேர்தலில் தெரியவரும்.

From around the web