அதிமுகவுக்கு ஆபத்து.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

 
CM Stalin

பாஜக வால் அதிமுகவுக்குத் தான் ஆபத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதைத் தொடர்ந்து ரூ.273.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் ரூ.68.76 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய போது, “ஆம்பூர் பிரியாணி என பல சிறப்பு கொண்ட திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.

2026 மட்டுமல்ல, 2031, 2036 என எப்போது இருந்தாலும் நாம்தான் என்பதை வரவேற்பு காட்டியிருக்கிறது. நேற்று காட்பாடிக்கு ரயிலில் வந்து இறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பால் மனம் நிறைந்துள்ளேன். தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத கடந்த கால ஆட்சியால் சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை 4 ஆண்டில் மீட்டெடுத்துள்ளோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி பரவ வேண்டும் என்பதே நோக்கம்.

அரசியல் காரணங்களுக்காக கடவுள் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டு மக்களை தங்களால் பிரிக்க முடியாததால் அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது பாஜக. திமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்ததை பார்த்து, மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பற்றி எரிகிறது.

இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளை தமிழ்நாட்டை அடகு வைக்க அனுமதிக்கக்கூடாது. பாஜகவும், அதிமுகவும் மக்களுக்காக கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகின்றன. தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அதிமுகவை வைத்துக்கொண்டே பேசுகிறது பாஜக. பாஜகவினால் அதிமுகவிற்கு தான் ஆபத்து"  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

From around the web