ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிர்டி உத்தரவு

 
Adal Padal

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18-ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வளத்தி காவல் நிலையத்தினர் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

Adal Padal

இந்த உத்தரவை எதிர்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு வருகிற 18-ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி வளத்தி போலீசில் மனு கொடுத்தோம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி எங்களது கோரிக்கையை போலீசார் நிராகரித்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து விட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

High-Court

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, “தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டத்துக்கு உட்பட்டு வளத்தி போலீசார் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

From around the web