சிலிண்டர் லாரி மீது பைக் மோதி விபத்து.. ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலி!

 
Perambalur

பெரம்பலூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் மூவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகன் வினோத் (19). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோர் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் நேற்றிரவு பெரம்பலூர் நோக்கி ஒரே பைக்கில் சென்றனர்.

Accident

அப்போது பெரம்பலூர் - துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் அருகே சென்றபோது அந்த வழியாக கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வினோத், ராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Padalur PS

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 3 இளைஞர்கள் விபத்தில் உயிரந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web