புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
school-leave

மழையினால் ஏற்பட்ட சேதம் குறையாததால் 3வது நாளாக நாளை (டிச. 6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

Rain

சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. காலை முதல் சென்னையில் பிரதான பகுதிகள் மின்சாரம் இன்றி இருண்டுள்ளது.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (டிச. 4) இன்றும் (டிச. 5) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாளையும் (டிச. 6) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

From around the web