நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு 1ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2,505-ல் இருந்து 2,740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டுனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.