குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்

 
TNPSC

தமிழ்நாட்டில் குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 15-ம் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முதலிய பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

TNPSC

அந்த வகையில், கடந்த 2022-ம் ஆண்டின் குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வு, அதே ஆண்டில் மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு முதன்மை தேர்வு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. முதன்மை தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 8-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், குரூப்-2 ஏ பதவிகளில், நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி தவிர மற்ற பதவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 15-ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி வரையில் சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

TNPSC

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு இடஒதுக்கீடு, தரவரிசை மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பாணையை அதே இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

From around the web