தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... மா.சுப்ரமணியன் முக்கிய எச்சரிக்கை!!

 
Corona Corona

ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் எச்3என்2 வகைக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றின் காரணமாக இருமல், உடல்வலி, சளி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு முகாமிற்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை மாவட்ட சுகாதார நிர்வாகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

Camp

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு வராமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துக்கொள்வது அவசியம். மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. வீட்டில் இருந்து கொண்டே சிகிச்சை பெறலாம் மருத்துவமனைகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே பதற்றம் கொள்ள தேவையில்லை.

காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகளோடு இந்த காய்ச்சல் வருகிறது. வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டாலே காய்ச்சல் பாதிப்பு சரியாகி விடும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். காரணம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதோ தும்மும் போதோ அதன் மூலம் மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் நாம் எப்படி தனி மனித இடைவெளி, முக கவசம் அணிவது போன்றவற்றை கடைபிடித்தோமோ அதே போல இப்போதும் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்களே என்று இல்லாமல் நமது உடல் ஆரோக்கியத்திற்காக நாம் முக கவசம் அணிவது அவசியமாகும்.

camp

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிலர் ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 25 பேராக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். 

எனவே பொது இடங்களில் தனி மனித இடைவெளி அவசியம். முக கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது அவசியம். அதன் மூலமே வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

From around the web