கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூல் அறிவிப்பு.. வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (ஏப்ரல் 8) நாளையும் (ஏப்ரல் 9) தென் தமிழ்நாடு மாவட்டங்கள், வட தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் (ஏப்ரல் 10) தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11-ம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 12-ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.