தொடர் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழ்நாடு, வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (ஜனவரி 7) முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரியலூர், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுக்காக்களுக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.