தொடர் கனமழை.. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியை சூழ்ந்த மழை நீர்..!

 
srivilliputhur

நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

குமரிக்கடல், தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது. குறிப்பாக கடலோரம் மற்றும் மலையடிவார மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ள மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Rain
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவும் பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வத்திராயிருப்பு பகுதியில் 11.32 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.

வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி வளாகம் முழுவதும் குட்டை போல் காட்சி அளிக்கின்றது. இதனால் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஜபுரம், தம்பிபட்டி, வத்திராயிருப்பை சுற்றியுள்ள விளை நிலங்களுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.

srivilliputhur

மேலும் ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கி மழை நீர் வெள்ளம் போல் ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். உடனே புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web