தொடர்ந்து நடியுங்கள் மிஸ்டர் விஜய்... 9 கிடுக்கிப்பிடி கேள்விகளை அடுக்கிய திமுக அயலகப் பிரிவு!!
கரூர் துயரம் குறித்து அரசியல் பேசாமல் பாதிக்கப்பட்ட மக்களுடனும் இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இந்த சம்பவத்தால் தனக்கு நேரப்போகும் அரசியல் நிலை என்னவென்று தெரியாமல் முதலமைச்சரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறார் விஜய். நடிகர் விஜய் யின் வீடியோவுக்கு பதிலளித்து திமுக அயலகப் பிரிவு சார்பில் 9 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,
”வணக்கம், திரு. விஜய் அவர்களே.
தான் நடத்திய ஒரு கூட்டத்தில் மாபெரும் துயரம் ஒன்று நடைபெறும்போது, அதற்கான பொறுப்பை முதலில் தான் ஏற்றுக்கொள்வதுதான் தலைமைக்கான பண்பு. அந்தப் பண்பு உங்களிடம் துளியும் இல்லை என்பது, முழுக்க முழுக்க அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெளிவாகிறது.
சரி, நீங்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போங்கள். "நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்லும் உங்களுக்கு சில கேள்விகள்:
1. நாமக்கல் மாவட்டத்தில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்வதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, சென்னையிலிருந்தே காலை 8:30 மணிக்கு கிளம்பியது ஏன்?
2. மதியம் 12.30 மணிக்கு வரவேண்டிய கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்தது ஏன்?
3. உங்களைப் பார்ப்பதற்காக காலை முதல் காத்திருந்த உங்கள் ரசிகர்களுக்கு தண்ணீர், உணவு என்று எதையும் கொடுக்காமல் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது ஏன்?
4. கூட்டம் அளவு கடந்து செல்வதால், பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி காவல்துறை அறிவுறுத்தியபோது, அதை மதிக்காதது ஏன்?
5. காவல்துறையிடம் நீங்கள் கேட்ட மூன்று இடங்களுமே குறுகலானவை என்று தெரிந்தும், காவல்துறை சரியான இடத்தை வழங்கவில்லை என்று பொய் கூறுவது ஏன்?
6. நீங்கள் பரப்புரை செய்த பகுதியில் அரசாங்கம் மின் துண்டிப்பு செய்யவில்லை என்றும், ஜெனரேட்டர் இருக்கும் பகுதியின் மேல் உங்கள் ரசிகர்கள் சென்று விழுந்ததால், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ஜெனரேட்டரை அணைத்தார் என்பது வீடியோ ஆதாரமாகவே உள்ள சூழ்நிலையில், அரசாங்கம் மின் துண்டிப்பு செய்தது என்று பொய் பரப்பியது ஏன்?
7. உங்களால் கரூர் செல்ல முடியாததற்கு காரணம் சொல்லும் நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகும் உங்கள் கட்சியினரைக் கூட அனுப்பி உதவிகள் செய்யச் சொல்லாதது ஏன்?
8. கரூரில் மட்டும் ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது என்று விஷமத்தனமாக கேட்கும் நீங்கள், மற்ற ஊர்களிலும் இவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா?
9. கரூரில் உங்களைப் பார்க்க வந்து இறந்த பலர் உங்கள் ரசிகர்களோ தொண்டர்களோ அல்ல என்று உங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது ஏன்? இதுதான் நீங்கள் இறந்த உங்களுடைய ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், "எந்த ஒரு தலைவரும் தன்னைப் பார்க்க வந்தவர்கள் இறக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்" என்றார். ஆனால் நீங்களோ, எந்த ஒரு பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல், பிரச்சனையை அரசின் பக்கம் திசைதிருப்பி விடும் வகையிலும், உங்களுடைய ரசிகர்களைத் தூண்டிவிடும் வகையிலும் சினிமா பாணியில் வீடியோவில் பேசியிருக்கிறீர்கள். ஒரு தலைவருக்கும் நடிகருக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தொடர்ந்து நடியுங்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
