தொகுதி மறுவரையறை ஐதராபாத் கூட்டம்.. முதலமைச்சர் இந்த தலைவரைக் கொஞ்சம் கவனிக்கனும்!!

 
Mahesh Kumar Telangana Congress

இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் 7 மாநிலங்கள் ஒன்றிணைந்து சென்னையில் மிகப்பிரம்மாண்டமான தொகுதி மறுவரையறை கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகா துணை முதலமைச்சரும் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவக்குமாரின் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடும், பேச்சுக்களும் தமிழர்கள் அறிந்த ஒன்று தான்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பாரத் ராஷ்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவின் பேச்சுக்கள் தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியது. இங்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி போல் தெலங்கானாவில் எதிரும் புதிருமாக உள்ள இரு தலைவர்களும் ஒருத்தர் பேச்சுக்கு மற்றவர் வலு சேர்க்கும் வகையில் ஒருமித்த கருத்தில் பாஜகவின் திட்டத்தின் விளைவுகளைப் பற்றி பேசினார்கள். புதிய ஆலோசனைகளையும் முன் வைத்தனர்.

ஐதராபாத்தில் அடுத்து நடக்கப்போகும் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் ரேவந்த் ரெட்டி, கே.டி.ராமாராவின் பங்கேற்பை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி ஒருமித்த கருத்தில் தெலங்கானா தலைவர்கள் பங்கேற்ற அதே கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பும் நடந்தது. அதில் பேசிய தெலங்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மகேஷ்குமார் கவுட் என்பவர் தான் ஒரு துளி விஷத்தைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ளார்.தொகுதி மறுவரையறையின் பாதிப்புகள் குறித்துப் பேசிய மகேஷ்குமார், கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானா மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்தெறிந்து விட்டனர் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் என்று ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ஒரே குரலில் மாநில உரிமைகளுக்காகப் பேசுவது என்பது மிகவும் அவசியமான நிலையில், உள்ளூர் அரசியலுக்காக இந்த மேடையை பயன்படுத்திக் கொண்டது முகம் சுளிக்க வைத்து விட்டது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் மகேஷ்குமார் போன்றவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் கட்டுப்பாட்டிற்குள்  வைக்க வேண்டும்.

ஒற்றுமையை சீர்குலைக்கும் இத்தகைய ஆசாமிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்பதே தொகுதி மறுவரையறையில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சரியான வழியாக இருக்கும்.

- ஸ்கார்ப்பியன்

From around the web