காங்கிரஸ் டூ பாஜக.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

 
Vijayadharani

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவான விஜயதரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜயதரணி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்ற அடையாளத்தோடு தேர்தலில் களம் இறங்கிய இவர் வெற்றி மேல் வெற்றியை குவித்து, அரசியலில் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

Vijayadharani

இந்த நிலையில் சமீபகாலமாக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையபோதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இணைப்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை விஜயதரணி செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.


இந்நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதிவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து விஜயதரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

From around the web