விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல் மாநில மாநாடு நடத்த இருக்கும் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மாநாடு தொடங்குவதற்கு முன்பு விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “விஜய் எனக்கு நீண்ட கால நண்பர். அவரை சிறுவயதிலிருந்து தெரியும். நான் தயாரித்த முதல் படம் அவருடையதுதான். அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
எந்த கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை. கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு முன் பல கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள், அவரது கொள்கைகள், மக்கள் பணியில் எப்படி ஈடுபடப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்” என தெரிவித்தார்.