அண்ணாமலை மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர். சரவணன் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணி உடைந்த நிலையில், அண்ணாமலை பேச்சின் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி பிளவு ஏற்பட்டதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவழ்ந்து, காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, தன்மானம் மிக்க ஒரு விவசாயினுடைய மகனை, பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என கொந்தளித்துப் பேசினார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர். சரவணன் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடும் அவர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவமானப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை பேசியுள்ளார்.
கடந்த 25.08.2024-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் கெட்ட எண்ணத்துடன் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசி அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அசிங்கப்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார். மேலும் எங்களது கட்சியையும் எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் அவர்களையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.
எனவே தொடர்ந்து எங்களது கழகத்திற்கும் கழகத்தின் பொதுச் செயலாளர், எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அசிங்கப்படுத்தும் கெட்ட எண்ணத்தொடனும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் மேற்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.