சத்து மாத்திரை சாப்பிடுவதில் மாணவிகளிடையே போட்டி.. சிகிச்சையில் இருந்த ஊட்டி மாணவி பலி!! தலைமையாசிரியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட்!!

 
Dead-body

ஊட்டி அருகே போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரைகளை உட்கொண்ட 4 மாணவிகளில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கடந்த 6-ம் தேதி குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி போட்டு மாத்திரை உட்கொண்டனர். இந்த போட்டியில் அதிக மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர். 

ooty

உடனடியாக மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். 

நால்வரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில் அதில் மூன்று மாணவிகளின் உடல்நிலை சீராகி வந்துள்ளது. ஆனால் சைஃபா பாத்திமா (13) என்ற ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் மோசமாகி கொண்டே சென்றதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ooty

பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை மாணவியை அழைத்து சென்றபோது சேலம் அருகே மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் குமாராப்பாளையம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதகையில் உள்ள உருது பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் முகமது அமீன், ஆசிரியர் கலைவாணி ஆகிய 2 பேரையும் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

From around the web