போராட்டம்....செந்தில் பாலாஜிக்கு முட்டுக்கட்டைப் போடும் எஸ்.பி.வேலுமணி!

 
SP Velumani

கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக திமுகவுக்கு வெற்றிகளைக் குவித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னெடுப்புகளை தடுப்பதற்காக போராட்டத்தை கையிலெடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மழை முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்கவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக எம்எல்ஏ-க்கள், கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), வி.பி.கந்தசாமி(சூலூர்), செல்வராஜ்(மேட்டுப்பாளையம்), அம்மன் அர்சுணன்(கோவை வடக்கு), பி.ஆர்.ஜி. அருண்குமார்(கவுண்டம்பாளையம்), தாமோதரன்(கிணத்துகடவு) ஆகியோர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (மே 26) மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அணையின்படி, கோவை மாவட்டத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். கோவை மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வரி விதிக்கப்படுகிறது. மின்கட்டண உயர்வு, மீண்டும் 6 சதவீத சொத்து வரி உயர்வு, சொத்துக்களுக்கும், வீடுகளுக்கும் வரி உயர்வு மட்டுமின்றி அபராத வரி விதிப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய அளவில் பேராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போராட்டங்கள் மூலம் முட்டுக்கட்டை போட்டுவிடலாம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நினைக்கிறார் போலும்.

From around the web