கல்லூரி மாணவர் பரிதாப பலி.. போதை மீட்பு சிகிச்சை மையத்தில் பயங்கரம்!

 
Coimbatore

கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர், அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க அவரது பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற போதை மீட்பு மையத்தில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்து சில நாட்களாக கிஷோருக்கு, அங்கு வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

drugs

இந்த நிலையில் சிகிச்சை முறைகள் கடுமையாக இருந்ததாலும், போதையில் இருந்து மீள முடியாமல் கிஷோர் தவித்து வந்ததாலும், வீட்டிற்கு செல்ல வேண்டுமென கூறி அடம்பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு மைய ஊழியர்கள், நேற்று கிஷோரின் கை, கால்களை கட்டி அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போதும் அவர் அதிக கூச்சலிட்டதால், அவரது வாயில் துணியை வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் மாணவர் கிஷோர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைய நிர்வாகிகள் இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார், கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kovilpalayam PS

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிகிச்சையின் போது மாணவர் உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை மையத்தின் வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மையத்தில் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த 30 பேரையும் வேறு மையத்திற்கு மாற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதை மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web