15 வயது காதலியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை.. இறப்பிலும் இணைபிரியாத காதல் ஜோடி!
பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் யுகேஷ் (20). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் காதல் குறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததால், இரு தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே இருவரும் சோகத்துடன் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென யுகேஷும் அந்த மாணவியும் மாயமாகி உள்ளனர். பெற்றோர், இருவரும் வேறு ஊருக்கு ஓடி சென்று விட்டதாக கருதி பல்வேறு இடங்களிலும் தேடி உள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த யுகேஷின் உறவினரான ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டபோது, அது மாயமான யுகேஷ் மற்றும் மாணவியின் உடல்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.