மாணவியின் தலை முடியை இழுத்து தாக்கிய கல்லூரி முதல்வர்.. 5 மணி நேரம் சிறைபிடித்த மாணவர்கள்!

 
Udumalai

உடுமலை அருகே மாணவியை கல்லூரி முதல்வர் தலை முடியை இழுத்து தாக்கியதால், மாணவர்கள் கல்லூரி முதல்வரை 5 மணி நேரம் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.  கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளங்கலை வணிகவியல் மாணவர்களுக்கு நேற்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்தது. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே நேரத்தில் வேறு துறை மாணவர்கள் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

Udumalai

இதனால், இளங்கலை வணிகவியல் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த கல்லூரி முதல்வர் கல்யாணி, போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மாணவியின் செல்போனை பறித்து அவரது தலைமுடியை இழுத்து தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பேராசிரியர் வாசுதேவன் என்பவர் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி முதல்வரை சிறைபிடித்து 5 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை வட்டாட்சியர் சந்திரசேகர், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் முதல்வர் மன்னிப்பு கேட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Udumalai

மாணவியின் தலைமுடியை இழுத்து கல்லூரி முதல்வர் தாக்கியதும், அதற்கு எதிர்வினையாக மாணவ, மாணவிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதும் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web